BREAKING
Welcome to our news platform - Stay updated with the latest news
Oct 19, 2026
Times of thirupputhur
இந்தியா உலகம் சினிமா விளையாட்டு ஆன்மிகம் தமிழ்நாடு தலையங்கம்
ஊர் ஊராகச் சென்று கழுதைப்பால் விற்பனை செய்யும் நாடோடிக் குடும்பத்தினர்!
தமிழ்நாடு Breaking

ஊர் ஊராகச் சென்று கழுதைப்பால் விற்பனை செய்யும் நாடோடிக் குடும்பத்தினர்!

By Admin • October 16, 2026 01:36 PM • 8 views

ஒரு சங்கு ரூ.100-க்கு விற்பனை; ஆர்வத்துடன் வாங்கும் மக்கள்!

நெற்குப்பை அக்: 16 

சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே நெற்குப்பை, ஆ.தெக்கூர், ஒலுகமங்கலம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுப்புற கிராமங்களில், கடலூர் மாவட்டம் தொழுதூரைப் பூர்வீகமாகக் கொண்ட 12 பேர் அடங்கிய குழுவினர், சாம்பல் மற்றும் வெள்ளை நிறங்களில் காணப்படும் 20 கழுதைகளுடன் ஊர் ஊராகச் சென்று கழுதைப்பால் விற்பனை செய்து வருகின்றனர்.

பால் கேட்பவர்களின் இடத்திற்கே சென்று, அங்கேயே கழுதையிலிருந்து பால் கறந்து விற்பனை செய்கின்றனர். குறிப்பாக, குழந்தைகளுக்கு வழங்குவதற்காகப் பல பெற்றோர் கழுதைப்பாலை வாங்குகின்றனர். ஒரு சங்கு கழுதைப்பால் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து கழுதைப்பால் விற்பனை செய்யும் மணி கூறுகையில் நாங்கள் கடலூர் மாவட்டம் தொழுதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். தமிழகம் முழுவதும் ஊர் ஊராகச் சென்று கழுதைப்பால் விற்பனை செய்து வருகிறோம். பால் விற்பனைக்காகவே கழுதைகளை வளர்த்து வருகிறோம். கிராமங்களுக்குச் சென்று, வாடிக்கையாளர்கள் முன்னிலையில் பால் கறந்து விற்பனை செய்கிறோம்” என்றார்.

கழுதைப்பால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், நாள்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் என்ற நம்பிக்கைகள் இருந்தாலும், இத்தகைய மருத்துவப் பயன்கள் உறுதியாக நிரூபிக்கப்படவில்லை. குறிப்பாக, பச்சைப் பாலைப் பருகுவதால் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. குழந்தைகளுக்கு கழுதைப்பால் வழங்குவதற்கு முன்பு மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறுவது அவசியம். பிறந்த குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும் என மருத்துவ வழிகாட்டுதல்கள் வலியுறுத்துகின்றன.

மேலும் ஒருபுறம் கழுதைகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மறுபுறம் அவற்றை வளர்த்து, பால் விற்பனையை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள நாடோடிக் குடும்பங்களும் உள்ளனர். இவர்கள் கழுதைகளைத் தங்கள் குடும்பத்தின் ஓர் அங்கமாகப் பராமரித்து வருகின்றனர்.

எனவே, கழுதைகளின் எண்ணிக்கை குறைவதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றைப் பாதுகாக்கவும், கழுதைகளை வளர்த்து வாழும் நாடோடிக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.