திருப்புத்தூர் புதுப்பட்டி அருள்மிகு ஸ்ரீ மாவூடியூத்து காளியம்மன் கோயில் ஆடிச்சிறப்பு விழா!
பக்தர்கள் காப்பு கட்டினர்!
திருப்புத்தூர் ஜூலை :18
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் புதுப்பட்டியில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ மாவூடியூத்து காளியம்மன் கோயில் 28 ஆம் ஆண்டு ஆடி சிறப்பு அன்னதான பூஜை விழா மற்றும் பால்குட, பூத்தட்டு விழா வருகின்ற 24ம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருக்க துவங்கியுள்ளனர். இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் இரண்டாவது வெள்ளி அன்று மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியுள்ளது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காப்புக் கட்டிய நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் இரவு ஸ்ரீ ஆண்டி முனீஸ்வரர் கோயில் வீட்டில் பெண்கள் கும்மி கொட்டி வழிபடுவர். அதன் பின்பு ஆண்டி முனீஸ்வரருக்கு சிறப்பு அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெறும். ஒவ்வொரு நாளும் இரவு பூஜைகள் முடிந்தவுடன் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்படும். பின்பு வருகின்ற 23 ஆம் தேதி வியாழக்கிழமை காலை புதுப்பட்டி ஆலயத்தில் இருந்து கரந்த மலைக்கு சாமியாடிகள் மற்றும் விழா குழுவினர் பக்தர்கள் சென்று அங்கிருந்து புனித நீர் எடுத்துக்கொண்டு அன்று மாலை ஸ்ரீ மாவூடியூத்து காளியம்மன் கோவிலுக்கு வந்து சேர்வர். பின்பு மாலையில் கோயிலில் சாமி ஆட்டம் நடைபெறும். பின்பு அங்கிருந்து இரவில் சாமி ஆட்டம் ஆடியபடி முக்கிய வீதியில் வழியாக ஸ்ரீ ஆண்டி முனீஸ்வரர் ஆலயத்திற்கு வந்து சேர்வர். தொடர்ந்து அங்கு சாமியாட்டம், கும்மியாட்டம் பிரம்மாண்டமாக நடைபெறும். அதனை தொடர்ந்து மறுநாள் விழாவின் சிகர நிகழ்ச்சியாக காலையிலும் நடைபெறும் பிரமாண்ட சாமியாட்டத்தை தொடர்ந்து, கரந்த மலையிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் குடம் மற்றும் பால்குடம், பூத்தட்டு, தீச்சட்டிகள் சுமந்து பக்தர்கள் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வருவர். வரும் வழியில் ஆங்காங்கே சாமியாடிகள் அருவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கும் கூறுவர். இந்த அருள்வாக்கை கேட்பதற்காக புதுப்பட்டி, புதூர், நெடுமரம், உடையநாதபுரம், திருப்புத்தூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும் வருகை புரிவர். வழி நெடுகிலும் பெண்கள் வேப்பிலை, மஞ்சள் கலந்த நீரை ஊற்றி வழிபாடு செய்வர். பின்பு பக்தர்கள் கொண்டு வந்த பாலாலும், பூக்களாலும் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து கரந்த மலையிலிருந்து கொண்டு வந்த புனித நீர் குடத்தை சாமியாடி தலையில் சுமந்து வந்து கோயில் திருக்குளத்தில் மூழ்கியதும் கூடியிருக்கும் பெண்கள் குலவை இட்டு வழிபாடு செய்வர். அதன் பின்பு கிடாய் வெட்டி பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.