திருப்புத்தூர் ராஜகாளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி கோபூஜை வழிபாடு
ஆடி முதல் வெள்ளியையொட்டி கோபூஜை
திருப்புத்தூர் ஜூலை : 18
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் ராஜகாளியம்மன் ஆலமரத்துக் காளியம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளியையொட்டி கோபூஜை வழிபாடு நடைபெற்றது.
திருப்புத்தூர் நகரின் பிரசித்தி பெற்ற கோயில்களில் ராஜகாளியம்மன் கோயிலும் ஓன்று. மூதாதையர்களால் நதி வழி வந்த தெய்வம் என்று போற்றப்படும் காளியம்மனுக்கு முதல் ஆடிவெள்ளியை முன்னிட்டு அதிகாலை 5.30 மணிக்கு பால் தயிர், திருமஞ்சனம், இளநீர், பன்னீர், சந்தனம், உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அன்னை மீனாட்சி அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து ரமேஷ் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியர்கள் கோபூஜையை மேற்கொண்டனர். பக்தர்கள் கோமாதவை சுற்றி வந்து வழிபட்டனர் ஆலமரத்து அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஏராளமான பெண்கள் நெய் விளக்கேற்றியும் பொங்கல் வைத்தும் அம்பாளை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கபட்டது. ஆடிமாத கடைசி வெள்ளிக்கிழமை (14.8.2026 )-ல் நடைபெற உள்ள பால்குட விழாவிற்கு பக்தர்கள் சன்னதி முன்பு காப்புக் கட்டிக் கொண்டனர்.