திருப்புத்தூர் அருகே பாண்டிமுனி அய்யா கோயில் பூச்சொரிதல் திருவிழா! ஆட்டம் பாட்டத்துடன் பூத்தட்டுகளை சுமந்து வந்த இளைஞர்கள் பூச்சொரிந்து வழிபாடு!!
பூச்சொரிதல் திருவிழா!
திருப்புத்தூர் ஆக: 01
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே காட்டாம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட சௌமிய நாராயணபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாண்டி முனி அய்யா திருக்கோயிலில், பூச்சொரிதல் விழா நடைபெற்றது. 22ம் ஆண்டு நடைபெற்று வரும் இவ்விழா கடந்த ஆடி ஒன்றாம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்றிலிருந்து தினமும் விரதம் இருந்து வந்த பக்தர்கள், காலை பால்குடம் எடுத்து வந்து முனி அய்யாவிற்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து மாலை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்திலிருந்து கரகம் மற்றும் பூத்தட்டுகள் சுமந்து மேளதாளங்கள் முழங்க, இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக ஸ்ரீ பாண்டி முனியய்யா கோயிலை வந்தடைந்தனர். பின்பு பக்தர்கள் எடுத்து வந்த பூக்களால் அருள்மிகு பாண்டி முனி அய்யாவிற்கு பூச்சொரிதல் நடைபெற்றது. இதில் திரளான பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பூத்தட்டுகள் எடுத்து வந்து பூச்சொரிந்து வழிபட்டனர். இவ்விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும், பக்தர்களும் கலந்து கொண்டு முனி அய்யாவை வழிபாடு செய்தனர். இன்று மூன்றாவது வெள்ளியை ஒட்டி கோயில் முன்பு அதிகாலை 4 மணிக்கு பொங்கல் வைத்தும், கிடா வெட்டியும் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 11 மணியிலிருந்து இக்கோயில் வளாகத்தில் மிகப் பிரமாண்ட அன்னதானம் நடைபெற்று வருகிறது. இந்த அன்னதான விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீ பாண்டி முனியய்யா திருக்கோயில் விழா குழுவினரும், பூச்சொரிதல் நிகழ்ச்சிகளை இளைஞர்களும் செய்திருந்தனர்.