திருப்புத்தூரில் பேசும் தென் தெய்வம் அருள்மிகு ஸ்ரீ பூமாயி அம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா!
400 க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுவர், சிறுமிகள் முளைப்பாரி சுமந்து வழிபாடு!
திருப்புத்தூர் ஆக :26
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பூமாயி அம்மன், பேசும் தென் தெய்வமாக இப்பகுதி மக்களால் போற்றப்பட்டு வருகிறார். இக்கோயில் முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு 400 க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி சுமந்து அம்மனை வழிபட்டனர்.
தென்மாபட்டு ஊரார்கள் கொண்டாடும் இவ்விழாவானது கடந்த 18ம் தேதி செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்றிலிருந்து இப்பகுதி மக்கள் மற்றும் காப்பு கட்டியவர்கள் விரதம் இருந்து தினமும் வழிபாடு செய்தும், இரவில் கும்மி கொட்டியும் வந்தனர். நேற்று பால்குடத் திருவிழா நடைபெற்றது. விழாவில் நூற்றுக்கணக்கானோர் பால்குடம் சுமந்து வந்து அம்மனை வழிபட்டனர். 9 நாட்கள் விரதம் இருந்த பெண்கள் வீடுகளில் இருந்த முளைப்பாரிகளை எடுத்து வந்து இரவு ஊர் சவுக்கையில் வைத்து கும்மி கொட்டும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து இன்று தென்மாபட்டு ஸ்ரீ அக்கசாலை விநாயகர் கோயிலில் பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் என 400க்கும் மேற்பட்டோர் முளைப்பாரிகளை தலையில் சுமந்து, அங்கிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக ஸ்ரீ பூமாயிஅம்மன் கோயில் வந்தடைந்தனர். கோயில் பட்டர் பாண்டி, கரகம் சுமந்து முன்னே செல்ல, முளைப்பாரி சுமந்து வரிசையாக வந்த பெண்கள் பூமாயி அம்மன் கோயில் வந்தடைந்தனர். பின்பு அம்மனுக்கு பூச்சொரிந்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை தென்மாபட்டு ஊரார்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்