திருப்புத்தூரில் ஆடி வெள்ளி முதல் நாளில் அம்மன் கோவில்களில் பக்தர்கள் காப்பு கட்டி வழிபாடு!
ஆடி வெள்ளி முதல் நாள்
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில், ஆடி முதல் நாள் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி வழிபாட்டை தூக்கி உள்ளனர். திருப்புத்தூர் அருள்மிகு ஆலமரத்து காளியம்மன், ராஜகாளியம்மன் ஆலயங்களில் காலையில் இருந்து பக்தர்கள் வழிபாடு நடத்த துவங்கியுள்ளனர் ஆடி முதல் நாள் அதுவும் வெள்ளிக்கிழமை என்பதால் பக்தர்கள் கோவிலுக்கு வந்து அபிஷேகம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும் கோவில் வளாகத்தில் அகல்விளக்கு ஏற்றியும், பொங்கல் வைத்தும், அர்ச்சனைகள் செய்தும் வழிபட்டனர். அதோடு இக்கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை அன்று மிக பிரம்மாண்ட பால் குடத் திருவிழா நடைபெற இருப்பதால் முதல் வாரத்தில் இருந்தே பக்தர்கள் காப்பு கட்ட துவங்கியுள்ளனர். இன்றிலிருந்து இந்த மாதம் முழுவதும் பக்தர்கள் விரதம் இருந்து, 5வது வெள்ளி அன்று நடைபெறும் ஆடித்திருவிழாவில் பால்குடம் எடுத்தும், தீச்சட்டி சுமந்தும், அலகு குத்தியபடி பூக்குழி இறங்கி அம்மனை வழிபாடு செய்வர். இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஆலயத்தில் கோ பூஜை நடைபெற்றது. ஆடி முதல் வெள்ளியையை ஒட்டி ராஜகாளியம்மன் சந்தன காப்பு அலங்காரத்திலும், ஆலமரத்து காளியம்மன் சர்வ அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதேபோன்று புதுப்பட்டி மாவடியூத்து காளியம்மன் கோயிலிலும் பக்தர்கள் காப்பு கட்ட துவக்கியுள்ளனர். அதேபோன்று தென்மாபட்டில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலிலும் காப்பு கட்டி வருகின்றனர்.