திருப்புத்தூரில் நூற்றுக்கணக்கான பெண்கள் சுமந்து வந்த முளைப்பாரிகளை, புனித குளத்தில் கரைத்து வழிபாடு!
ஆடி பாரித்திருவிழா
திருப்புத்தூர் ஆக :06
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் நடுத்தெரு பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ கோட்டை முத்துமாரியம்மன் கோயில். இக்கோயிலில் கடந்த 196 ஆண்டுகளாக ஆடி மாதம் மூன்றாவது செவ்வாய் கிழமை ஆடி பாரித்திருவிழா கொண்டாடப்படுகிறது. அதேபோல் இந்த ஆண்டு திருவிழா கடந்த ஜூலை 28 ல் அம்மனுக்கு காப்புகட்டுதலுடன் துவங்கியது. அன்றிலிருந்து தினசரி இரவு அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் பெண்கள் கும்மியடித்து அம்மனை பிரார்த்தனை செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு 160 பெண்கள் தலையில் முளைப்பாரி சுமந்து கோட்டை முத்துமாரியம்மன் கோயிலிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு தேரோடும் வீதிகளின் வழியாக மீண்டும் கோயில் வந்தடைந்தனர். தொடர்ந்து நேற்று காலை மீண்டும் கோயிலிலிருந்து மதுக்குடங்கள், பாரியுடன் பெண்கள் ஊர்வலமாக புறப்பட்டு திருத்தளிநாதர் கோட்டை கருப்பர், வீரமாகாளியம்மன், பூமாயி அம்மன் கோயில்களில் வழிபாடு செய்து பின்னர் புனித தெப்பக்குளமான சீதளிகுளத்தில் பாரியை கரைத்து நேர்த்திக்கடனே நிறைவு செய்தனர். பின்பு அம்மனுக்கு தூப, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.