BREAKING
Welcome to our news platform - Stay updated with the latest news
Sep 04, 2026
Times of thirupputhur
இந்தியா உலகம் சினிமா விளையாட்டு ஆன்மிகம் தமிழ்நாடு தலையங்கம்
நகர வயிரவன்பட்டி வயிரவர் சுவாமி திருக்கோயிலில் ஆடி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
ஆன்மிகம் Breaking

நகர வயிரவன்பட்டி வயிரவர் சுவாமி திருக்கோயிலில் ஆடி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

By Admin August 06, 2026 03:18 PM 96 views

ஆடி பிரம்மோற்சவ திருவிழா

திருப்புத்தூர் ஆக: 06 

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகே நகர வைரவன்பட்டியில் உள்ள அருள்மிகு வயிரவர் சுவாமி திருக்கோயில் ஆடி பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் 11 நாட்கள் பிரமோற்சவ திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நகரத்தார்களின் 9 திவ்ய ஸ்தலங்களில் ஒன்றான இக்கோயிலில் நடைபெறும் இந்த விழா, இப்பகுதியில் மிகவும் பிரசித்திபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு ஆக.5 ல் அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் யாகசசாலை பூர்வாங்க பூஜைகள் துவங்கின. தொடர்ந்து மாலையில் வாஸ்து சாந்தி, ஆச்சார்யருக்கு காப்புக்கட்டுதல் நடைபெற்றது. இன்று கோயில் உட்பிரகாரத்தில் கலச பூஜை நடைபெற்றது. பின்பு விநாயகரும், உற்சவர் வயிரவரும் கொடி மரத்துக்கு முன்பு எழுந்தருளினர்.அதனை தொடர்ந்து சூரியன், சந்திரன், பைரவரின் ஆயுதங்கள் மற்றும் சுவாமியின் வாகனமான விருஷபம் என்ற நந்தி படம் வரையப்பட்ட கொடிபடத்திற்கு. சிறப்பு பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காட்டப்பட்டது. பின்பு மேளதாளங்கள் ஒலிக்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வெள்ளி கொடி கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அதனையடுத்து கொடிமரத்துக்கு தர்ப்பை புல், பட்டு சாத்தப்பட்டு, பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்பு கொடிமரத்திற்கும், உற்சவ சுவாமிகளுக்கும் அடுக்கு தீபம், நாகதீபம், கற்பூர தீபம் ஆகிய சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. மாலையில் சுவாமிக்கு காப்புக்கட்டி உத்ஸவம் துவங்கும். இரவு 7:00மணிக்கு சிம்ம வாகனத்தில் உற்ஸவ வயிரவசுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை 9:15 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடும், இரவில் வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறும். விழாவின் சிகர நிகிழ்ச்சியான ஆக.14 ல் காலை 9:15 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளல் நடைபெறும். மாலை 4:30 மணிக்கு மேல் தேர் வடம் பிடித்து தேரோட்டமும், இரவு 7:00 மணிக்கு திருத்தேர் தடம் பார்த்தலும் நடைபெறும். ஆக.,15ல் காலையில் தீர்த்தவாரியும், இரவு 7:00 மணிக்கு பூப்பல்லக்கும் நடைபெறும். 11ம் திருநாளான ஆக.16ல் காலையில் பஞ்சமூர்த்திகள், வயிரவசுவாமிக்கு மகா அபிேஷகமும், மாலையில் திருக்கல்யாணம், இரவில் சுவாமிகள் திருவீதி உலாவும் நடைபெறும். இந்த பிரமோற்சவ நாட்களில் வைரவ சுவாமியை வழிபட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், குறிப்பாக நகரத்தார் சமூக மக்கள் பெருமளவில் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்வர். விழா ஏற்பாட்டினை ஏழகப் பெருந்திருவான வயிரவன்கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் அறக்கட்டளை தலைவர் ஒ.சிறுவயல் நாகப்பன், செயலாளர் கல்லல் எஸ்பி.ஐயப்பன் என்ற சிதம்பரம், உப தலைவர் வலையபட்டி எஸ்டி.சொக்கலிங்கம், இணைச் செயலாளர் அரியக்குடி என்.ராமசாமி, பொருளாளர் காரைக்குடி ஆர்எம்.ராமசாமி செய்து வருகின்றனர்.