கண்டரமாணிக்கம் மாணிக்கநாச்சி அம்மன் கோயில் பால்குட திருவிழா
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், சலங்கை கரகம் சுமந்தும், வேல் குத்தி, பூக்குழி இறங்கி வழிபாடு
திருப்புத்தூர் ஏப் :29
சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூா் அருகேயுள்ள கண்டரமாணிக்கம் கிராமத்தில் அமைந்துள்ள மாணிக்கநாச்சியம்மன் கோயில். இதன் மூலஸ்தானம் தெற்குபட்டில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தா்கள் பால்குடம் சுமந்து வந்து அம்மனை வழிபட்டனா். இக்கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 21-ம் தேதி, காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி, திருவீதி உலா நடைபெற்றது. இந்தத் திருவிழாவின் 8-ஆம் நாளான நேற்று முன்தினம் திருத்தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து 9-ஆம் நாள் திருவிழாவான நேற்று, பால்குடத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. காலை 10 மணிக்கு கோயில் அருகே ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான பக்தா்கள், பால்குடம் சுமந்து கோயிலை சுற்றி வலம் வந்தனா். பின்னா் முக்கிய வீதிகள் வழியாக பெண்கள், குழந்தைகள் உட்பட பக்தர்கள் பால் குடம் சுமந்தும், சலங்கை கரகம் சுமந்தும், அலகு குத்தியும் தெற்குப்பட்டு மூலஸ்தானக் கோயிலுக்கு சென்றனா். அங்கு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்பு பக்தர்கள் சுமந்து வந்த பாலால் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் கண்டரமாணிக்கம், பட்டமங்களம், கொங்கரத்தி, பெருச்சிகோயில், வலையபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.