BREAKING
Welcome to our news platform - Stay updated with the latest news
Jun 03, 2026
Times of thirupputhur
இந்தியா உலகம் சினிமா விளையாட்டு ஆன்மிகம் தமிழ்நாடு தலையங்கம்
சிங்கம்புணரியில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சித்தர் முத்துவடுகநாதர் கோவிலுக்கு 10  ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபாடு
ஆன்மிகம் Breaking

சிங்கம்புணரியில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சித்தர் முத்துவடுகநாதர் கோவிலுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபாடு

By Admin May 02, 2026 05:16 AM 24 views

தொட்டியில் ஊற்றப்பட்ட பால் மின் மோட்டார் மூலம் சித்தர் முத்துவடுகநாதருக்கு அபிஷேகம்

சிங்கம்புணரி மே :02

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு சித்தர் முத்துவடுகநாதர் சுவாமிக்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து கேட்ட வரம் தந்தருளும் சித்தருக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்வு ஆண்டுக்கு ஒருமுறை சித்திரை மாதம் சித்ரா பெளர்ணமி அன்று நடைபெறும். சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி இந்த பகுதி மக்களிடையே மக்களோடு மக்களாக வாழ்ந்து முக்தி பெற்றவராகவும் பொதுமக்கள் முன்னிலையில் மேளதாளத்துடன் வந்து சுமார் 193 ஆண்டுகளுக்கு முன்பாக சிங்கம்புணரி நல்லாகுளம் வடகரையில் ஜீவசமாதி பெற்று முக்தி அடைந்தார். அதை தொடர்ந்து கேட்ட வரம் கொடுக்கும் வள்ளலாக சுவாமி முத்துவடுகநாதர் இருப்பது சிறப்பான விஷயமாகும்.

 

அதோடு மட்டுமின்றி சித்ரா பௌர்ணமியில் சித்தர் பெருமக்கள் அனைவரும் வெவ்வேறு ரூபங்களில் பூமிக்கு வந்து அருள்வார்கள் என்று அகத்தியர் நூல்கள் கூறுகின்றன. இதனால் இந்நாளில் சித்தர் வழிபாடு, சித்தர் ஜீவசமாதிக்குச் சென்று வழிபடுவது மன அமைதியையும் உடல் பலத்தையும் அருளும் என்பதால் சித்ரா பௌர்ணமி அன்று சித்தர் முத்துவடுகநாதருக்கு 85-ம் ஆண்டு பால்குடம் விழா விமர்சையாக நடைபெறுகிறது. 

அதன் ஒருபகுதியாக சிங்கம்புணரி வணிகர் நலச் சங்கம் சார்பில் கடுமையான விரதம் இருந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சீரணி அரங்கம் பகுதியில் இருந்து பால்குடங்களுடன் காத்திருந்தனர். பக்தர்கள் அழைத்து வர சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் இருந்து ஆலவட்டத்துடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று சீரணி  அரங்கம் சென்றடைந்தனர். அங்கிருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒருசேர பால்குடங்களை தலையில் சுமந்து சாரை சாரையாக அங்கிருந்து புறப்பட்டனர். ஆலவட்டம் முன்னே செல்ல பால்குடங்கள் பெரிய கடை வீதி நான்கு முனை  சந்திப்பு சாலை வேங்கைபட்டி சாலை வழியே சென்று சித்தர் முத்துவடுகநாதர் கோவிலை அடைந்தனர். அங்கு பக்தி பரவசத்துடன் பக்தர்கள் கொண்டு வந்த பால் கோவில் அருகே வைக்கப்பட்டுள்ள பெரிய தொட்டியில் கொட்டப்பட்டு மின் மோட்டார் மூலமாக சித்தருக்கு அபிஷேகம் நடைபெற்றது.