திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழா!ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!
திருப்புத்தூரில் அமைந்துள்ள, பேசும் தென் தெய்வம் என பக்தர்களால் போற்றப்படும் அருள்மிகு பூமாயி அம்மன் திருக்கோயிலில் வருடாபிஷேக விழா நடைபெற்றது.
திருப்புத்தூர் ஏப் : 01
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் அமைந்துள்ள, பேசும் தென் தெய்வம் என பக்தர்களால் போற்றப்படும் அருள்மிகு பூமாயி அம்மன் திருக்கோயிலில் வருடாபிஷேக விழா நடைபெற்றது. இந்து சமய அறநிலைத்துறைக்குட்பட்ட இக்கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கும்பாபிேஷகம் முடிந்து ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து நேற்று வருடாபிேஷக விழா நடந்தது. வருடாபிஷேகத்தை முன்னிட்டு புனித நீர் கலசங்களுக்கு பிள்ளையார்பட்டி தலைமை குருக்களான, பிச்சை குருக்கள் தலைமையில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தனபூஜை உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, கணபதிஹோமம், யாகவேள்வி நடைபெற்று பூர்ணாகுதியுடன் தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து பூமாயி அம்மனுக்கு பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது, பின்பு முன்னாள் தக்கார் தங்கவேலு உள்ளிட்ட விழா குழுவினர் புனித தீர்த்தங்கள் அடங்கிய கலசங்களை ஓம் சக்தி, பராசக்தி என்ற பக்தி முழக்கங்களோடு கோவில் உட்பிரகாரத்தை சுற்றி வலம் வந்தனர். தொடர்ந்து கலச நீரால் உற்சவரான பூமாயி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்பு சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு பன்முக தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிவாச்சாரியார்கள், பட்டர்கள், உட்பட ஏராளாமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.