திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
300-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி வழிபாடு
திருப்புத்தூர் அக் 14, சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூா் அருள்மிகு பூமாயி அம்மன் கோயிலில் 36-ஆம் ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி, திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவையொட்டி, மூலவர் பூமாயி அம்மன் சா்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இக்கோயிலில் அக் 11ல், இலட்சார்ச்சனையுடன் நவராத்திரி விழா துவங்கியது. 10 நாட்கள் இங்கு கொண்டாடப்படும் நவராத்திரி விழாவில், முதல் நாள் ராஜராஜேஸ்வரி, 2வது நாள் அன்னபூரணி, 3 வது நான் சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் கொலு மண்டபத்தில் எழுந்தருளி உற்சவ அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து நவராத்திரி விழாவின் மூன்றாம் நாளில் அம்மன் சன்னதி எதிரே திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மாலை 6 மணியளவில் திருவிளக்கின் செல்வி விசாலாட்சி, விநாயகர் மந்திரம் முழங்க திருவிளக்குப் பூஜை தொடங்கியது. அப்போது பெண்கள் தாங்கள் எடுத்து வந்திருந்த குத்துவிளக்குகளை அலங்கரித்து தீபம் ஏற்றினர். பின்பு மஞ்சள் பொடியால் விநாயகர் செய்து அதற்கு பூஜை செய்தனர். கோயில் சார்பில் பூக்கள், எண்ணெய், மஞ்சள், வளையல், திரி, குங்குமம் உள்ளிட்ட பூஜை பொருள்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து 1008 காயத்ரி மந்திரங்கள், 108 மகாலட்சுமி மந்திரங்கள் சொல்லச் சொல்ல, பூஜை செய்யும் பெண்களும் மந்திரங்கள் கூறி தங்களின் விளக்குகளுக்கும், மஞ்சளாலான விநாயகருக்கும் பூக்கள், குங்குமத்தால் அர்ச்சனை செய்து, மங்கள ஆரத்தி எடுத்தனர். திருவிளக்கு செல்வி பக்தி பாடல் பாட விளக்கேற்றிய சில பெண்களுக்கு சாமி வந்தது. மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், தாலி பாக்கியம் மற்றும் உலக நன்மை வேண்டியும் நடைபெற்ற இந்த திருவிளக்கு பூஜையில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து மூலவருக்கு பன்முக தீபாராதனை நடைபெற்றது. பின்பு கொலுவில் சமயபுரத்து மாரியம்மன் அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவ அம்மனுக்கு பட்டர்களால் மகா தீபராதனை காட்டப்பட்டது. மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் சுப்பையா - பத்மாவதி, அர்ஜுனன் - சுலோட்சனா, நடராஜன் - சுந்தரம்மாள் ஆகியோர் குடும்பத்தினர் உபயதாரர்களாக கலந்துகொண்டு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருவிளக்கு பூஜை விழா ஒருங்கிணைப்புகளை பூமாயி அம்மன் கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.