திருப்புத்தூரில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய அருள் தல திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
புனித ஆரோக்கிய அன்னை ஆலய அருள் தல திருவிழா கொடியேற்றம்
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் அருள் தலத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8ம் தேதி அன்னை மரியாளின் பிறந்தநாள் விழா உலகமெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் திருப்புத்தூரில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் அன்னை மரியாளின் பிறந்தநாள் விழா, அருள் தல பெருவிழாவாக கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு இன்று ஆலயத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் கிறிஸ்தவ பாடல் பாடியபடி ஆரோக்கிய அன்னையின் உருவம் பொறிக்கப்பட்ட திருக்கொடியை பக்தியோடு எடுத்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொடி மேடை, கொடி கம்பம் அருகில் கொண்டு வந்தனர். அங்கு பக்தர்கள் கொண்டு வந்த அன்னையின் கொடி படத்திற்கு அருட்தந்தை பிரிட்டோ ஜெயபாலன் புனித நீர் தெளித்து, தூப ஆராதனை செய்து, ரட்சித்தபடி, பங்குத்தந்தை அற்புத அரசுடன் இணைந்து புதிய கொடிக்கம்பத்தில் கொடியை ஏற்றி வைத்தார். கொடியேற்றத்தின்போது வான வேடிக்கைகள் முழங்க, பக்தர்கள் மரியே வாழ்க என்றபடி பிரார்த்தனை செய்தனர். கொடியேற்றத்தை தொடர்ந்து திருவிழா தொடக்கமாக திருப்பலி நடைபெற்றது. திருப்பலியை திருப்புத்தூர் புனித அமல அன்னை ஆலய பங்குத்தந்தை அற்புதஅரசு, அருட்தந்தை பிரிட்டோ ஜெயபாலன் ஆகியோர் இணைந்து கூட்டு திருப்பலி நிறைவேற்றினர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். நாளை மாலை அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் சப்ரம் பவனி விழா நடைபெறும். அவ்விழாவில் மாதா சொரூபம் தாங்கிய சப்பரத்தை பெண் பக்தர்கள் தோளில் சுமந்து, கிறிஸ்துவ பாடல்கள் பாடியபடி எடுத்துச் சென்று ஆலயத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பர். அதன்பின்பு பெருவிழா திருப்பலி நடைபெறும். தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெறும். அதன் பின்பு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடையும்.