பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயில் சதுர்த்திப்பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டம்
ஆண், பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்த கற்பக விநாயகர் தேர், பெண்கள் மட்டும் இழுத்து சென்ற சண்டிகேஸ்வரர் தேர்!
திருப்புத்தூர் செப்:14
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள உலக பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பகவிநாயகர் ஆலயத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இங்கு பத்து நாள் கொண்டாடப்படும் இந்த சதுர்த்தி விழா, கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றிலிருந்து தினமும் காலையில் வெள்ளிக்கேடகத்தில் உற்வர் ஸ்ரீ கற்பகவிநாயகர் எழுந்துருளி திருவீதி உலா வருகிறார். அதே போன்று இரவில் சிம்மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை, யானை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளியும் திருவீதி உலா வருகிறார். இந்நிலையில் விழாவின் 9 ஆம் நாள் திருவிழாவான தேரோட்டம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் உற்சவரான கற்பக விநாயகரும், அதற்க்கு பின்பு வந்த சிறிய தேரில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளினர். சண்டிகேசுவரர் எழுந்தருளிய தேரை பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது குலவையிட்டபடியும், ஆர்ப்பரித்தபடியும் வடத்தை பிடித்து இழுத்து கொண்டாடி சென்றனர். இந்த தேரானது கோயிலை சுற்றி முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து மீண்டும் நிலையை அடைந்தது. இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகரை வழிபாடு செய்தனர்.
ஒன்பதாம் திருநாளான இன்று ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சந்தனக்காப்பில் கற்பக விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த சந்தனக்காப்பு அலங்காரத்தை கண்டு தரிசனம் செய்ய தமிழகம் முழுவதிலும் இருந்து திரளாக பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்பட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்து தங்கக் கவசத்தில் அருள்பாலிப்பார். காலை 9 மணிக்கு மேல் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். ஏற்பாட்டினை நடப்பு காரியக்காரர்கள் கோனாபட்டு அரு.ராமசாமி அரிமளம் நா.கண்ணன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.